கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமை முடிவுக்கு வந்தவுடன் தமது முதலாவது சுற்றுலா நாடாக இலங்கை அமையும் என்று சீனா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சீனாவின் உயர்மட்ட தூதுக்குழு இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை முன்னெடுத்திருந்தது.
இதன்போது அரச தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை -சீன நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் சுற்றுலாத்துறை குறித்து சீன மக்களுக்கு அதிக ஆர்வத்தை கொடுக்குமாறு இலங்கை அரசாங்கம் சீனத் தூதுக்குழுவிடம் கேட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள சீன குழுவினர் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சீனாவும் முழு ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர்.
தற்போது உலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸ் பரவல் தாக்கம் அதிகமாக இருக்கின்ற போதும், அதில் இருந்து விரைவாக விடுபட்டு வரும் நாடுகளில் இலங்கையும் சீனாவும் இருப்பதால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதும் சீனாவின் முதலாவது சுற்றுலா நாடாக இலங்கை இருக்கும் என்று சீன தூதுக்குழு இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.