வெளிநாடுகள் இலவசமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரம் இந்த அரசாங்கம் நம்பியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி கொள்வனவுக்கு நிதி ஒதுக்கி, அதனை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் பின்னடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பயணத் தடையால் அன்றாடம் கூலித்தொழிலை நம்பியுள்ள மக்கள் தற்போது உணவுக்கு கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அரசாங்கம் இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரொனா விடயத்தில் அரசு சரியாக திட்டமிடாத காரணத்தினால் நாடு மோசமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வட கிழக்கு மக்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. அது கவலை தருகின்றது.
தற்போது யாழ் மற்றும் வன்னியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.
வடக்கிற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக சொல்கிறார்கள். அது போதாது.
ஒட்டுமொத்த மக்கள் மீதும் இந்த அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யப் போகின்றதாகக் கூறினாலும், அதற்கான நிதி ஒதுக்கீட்டை இதுவரைக்கும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.