கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கையின் கடற்பரப்புக்கு வர அனுமதிக்கப்பட்டது தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பாக விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து இலங்கை எவ்வளவு நஷ்டஈட்டைக் கோருவது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கையின் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான ‘நிவ் டயமன்ட்’ கப்பல் உரிமையாளர்கள் நஷ்டஈட்டுத் தொகையைச் செலுத்தினார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் கசிவு ஏற்பட்டிருப்பது அரேபிய கடலில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு வர அனுமதியளித்தது யார்? என்பது விசாரிக்கப்பட வேண்டும்’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.