இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கமளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளாந்த பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்று நோய் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே, பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படும் போது, அவரது வீட்டில் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
14 நாட்களின் பின்னர் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் போது, அவர்களுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்படும் நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் இதற்காக செலவு செய்யாமல், புதிய நோயாளர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சிறிது தளர்வு ஏற்பட்டிருக்கலாம்” என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.