July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட்டின் கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு இன்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட விரோதமாக தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தன்னை விடுதலை செய்யுமாறு இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி, சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக ரிஷாட் பதியுதீன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  நீதியரசர்களில் ஒருவரான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக் சில்வா, தான் இந்த மனு மீதான விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து மனு மீதான பரிசீலனையை ஜுன் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் ரிஷாட் பதியுதீன் தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசாவின் வழிகாட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சட்டத்தரணி அமீர் அலி ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.