இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வியாபார வாகனங்களின் ஊடாக விநியோகிப்பதற்கு கொவிட் தடுப்பு செயலணியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையோருக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதியை வழங்குவதற்கும் கொவிட் தடுப்பு செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையவர்கள் வெளியில் செல்லும் போது கட்டாயமாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம், சேவை நிலைய அடையாள அட்டை அல்லது சேவை நிலையத்தின் அனுமதி கடிதம் இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டால் வருமானம் இழந்த குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் இதற்காக அரசாங்கத்தினால் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.