May 26, 2025 2:27:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீயால் நீர்கொழும்பு முதல் மன்னார் வரையான கடற்பரப்புக்கு ஆபத்து!

‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வெளியான சிதைவுகள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட இரசாயன கலப்புகளால் நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கடற்பரப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என கடல்சார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கப்பலில் இருந்து எரிபொருள் அல்லது எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அது நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கடற்பரப்பில் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எம்.பத்மலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கப்பலில் இருந்த பிளாஸ்டிக் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் கடலில் தற்போது கலந்துள்ளதால் அது கடற்கரையைப் போல நாட்டைச் சூழவுள்ள முழு சமுத்திரத்துக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 5 மில்லி மீட்டருக்கும் குறைவான கண்ணுக்கு தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையில், ஏற்கனவே நாட்டின் மூன்று கடல் வலயங்களிலும் இருந்து எழுந்தமானமாக எடுக்கப்பட்ட மீன் மாதிரிகளில் பெரும்பாலானவை அதிக அளவு மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது கடந்த ஆண்டு தெரியவந்தது எனவும் இவ்வாறான நிலைமையில் தற்போது எரிந்துள்ள கப்பலில் இருந்து விழுந்த பொருட்களால் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்தக் கப்பல் மூழ்கினால் இலங்கையின் மேற்கு கரைகளில் நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பணம் உட்பட பல பகுதிகளில் எண்ணெய் படலம் உருவாக கூடும் என அஞ்சப்படுகிறது.