கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என வெளியாகும் கருத்துக்கள் கட்டுக்கதையே என்று இலங்கையின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
வைரஸ்கள் ஒருபோதும் வெளிச்சூழலில் வளரும் திறன் கொண்டவை அல்ல என்றும், பொதுவாக வைரஸ்கள் உயிருள்ள உயிரணுக்களில் மட்டுமே வளரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சாதாரண வெப்பநிலையில் வைரஸ் அழிவடைந்துவிடும் என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் உமிழ்நீர் மூலம், கொரோனா வைரஸ் இன்னொரு நபருக்கு பரவ முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பேணுவதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், வைரஸ் ஒரு நபரின் கண்களின் ஊடாகவும் நுழையக்கூடும் என்றும் கூறியுள்ள பேராசிரியர், வைரஸ் சில மேற்பரப்புகளில் சில காலம் இருக்கக்கூடும் என்றும் சவக்காரம் போட்டு கை கழுவுவது வைரஸைக் அழித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.