October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 829 பேர் கைது; 39 வாகனங்களும் பறிமுதல்!

இலங்கையில் 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்பேரில் நாளொன்றில் கைது செய்யப்பட்ட அதிகளவானவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த 2020 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை அச்சட்டத்தைமீறும் வகையில் செயற்பட்ட 15,595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மேல் மாகாணத்தில் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்ட 700 வாகனங்களில் 39 வாகனங்கள் எவ்வித அத்தியாவசிய காரணங்களுமின்றி பயணித்தவை என அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து அந்த வாகனங்களில் பயணித்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 3000 க்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், 27 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

அதேநேரம் மேல் மாகாணத்திலிருந்து 68 பேர் பிற மாகாணங்களுக்கு செல்ல முயற்சித்தபோது திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.