February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொறட்டுவை மாநகர மேயர் சமன்லால் கைது செய்யப்பட்டார்!

கொழும்பு மாவட்டத்தின் மொறட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொறட்டுவை பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கொவிட் தடுப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் போது சுகாதார ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கல்கிசை பொலிஸ் நிலையத்தில் மொறட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆஜராகியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொறட்டுவை பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் போது, தன்னால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலுக்கு அமைய தடுப்பூசிகளை வழங்காமை தொடர்பில் சமன்லால் பெர்னாண்டோ சுகாதார அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவர் நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்து சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி இன்று பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்துடன், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜுன் 11 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.