இலங்கை முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 மற்றும் 4 ஆம் திகதிகளில் தற்காலிகமாக தளர்த்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று கூடவுள்ள கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பபடவுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பாக இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 21 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதனை ஜுன் 7 ஆம் திகதி வரையில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இடையில் மே 25, 31 ஆம் திகதிகளிலும் மற்றும் ஜுன் 4 ஆம் திகதியும் தற்காலிகமாக தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த 25 ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்பட்ட போது மக்கள் நகர் பிரதேசங்களில் பெருமளவில் கூடியதால் அது தொடர்பாக சுகாதார தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்திருந்ததுடன், இராணுவத் தளபதியும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 31 மற்றும் 4 ஆம் திகதிகளில் கட்டுப்பாட்டை தளர்த்தாது தொடருமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வீடுகளுக்கு அருகில் நடமாடும் வாகனங்களின் ஊடாக பொருட்களை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கவும் அரசாங்கத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் இன்று ஜனாதிபதி தலைமையில் கூடும் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.