November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவு; அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகியோரை, கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் கட்சியின் யாப்புக்கு அமைவாக, கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

கட்சி யாப்பின் பிரகாரம் அத்தகையதொரு தீர்மானம் இரண்டு வாரத்துக்குள் கட்சியின் அரசியல் அதிகார பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு அரசியல் அதிகார சபை அதனை உறுதிப்படுத்த வேண்டும்.இதற்கு அமைவாக கடந்த 25 ம் திகதி செவ்வாய்க்கிழமை கூடிய கட்சியின் அரசியல் அதிகார பீடம், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு பூரண அங்கீகாரம் அளித்தது.

மேலும் அரசியல் அதிகார சபை மேற்சொன்ன இரண்டு அங்கத்தவர்கள் சம்பந்தமாக ஒழுக்காற்று குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி, கட்சியின் சட்டம், மற்றும் யாப்பு சம்பந்தமான பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் நியமிக்கப்பட்டதோடு, அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் முன்னாள் ஈரான் நாட்டின் இலங்கை தூதுவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறையின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி அனீஸ் அவர்களும், அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு மிக விரைவில் மேற்கூறிய இரண்டு அங்கத்தவர்களுக்குமான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.