கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுகத்திற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
இதன் காரணமாக கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாகக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறியும் ஆய்வுகளில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்பந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என அமைச்சர் கூறினார்.
இதன் அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.