July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஜூன் மாதம் முதல் விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும் உள்ளக விமான சேவைகள் இடம்பெறாது!

கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை வழமை போன்று சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நாட்டுக்கு வரவழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை காரணமாக நாடளாவிய ரீதியிலான பயண முடக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ள அதேநேரத்தில் கடந்த 21 ஆம் திகதியில் இருந்து விமான சேவைகளை முடக்குவதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தொடர்ச்சியாக இரண்டு வார காலமாக விமான நிலையங்கள் இரண்டும் முடக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து விமான நிலையங்களை வழமையான சேவைகளுக்காக திறக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

விமான நிலையங்கள் திறந்தாலும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தற்போது இலங்கைக்கு வர முடியாது எனவும், வெளிநாடுகளில் பணிபுரியும், தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் கூறுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் பலர் தாம் மீண்டும் நாட்டுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனவே அதற்கமைய விமான சேவைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

எனினும் இலங்கைக்கு வருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்டிப்பாக 21 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியன திறக்கப்படும். ஆனால் பலாலி, இரத்மலானை உள்ளக விமான நிலையங்களை தற்போது இயக்க தாம் தயாராக இல்லை எனவும் அவர் கூறினார்.