
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்திற்கு வெளியே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக சபாநாயகர் தெரிவித்துள்ள கருத்தை எதிர்க்கட்சி நிராகரித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராளுமன்றத்தினுள் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று சபாநாயகர் கூறியது, எந்த அடிப்படையில் என்று எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்திலும், பாராளுமன்ற செயலாளர் மற்றும் உப செயலாளர் அலுவலகங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் கொரோனா அபாயம் இருந்த நிலையில், மே 18 முதல் பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அவ்வாறு அமர்வுகளை நடத்தாமல் இருந்திருந்தால் இந்த தொற்று ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகளை பிற்போடுவதற்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரிடம் உடன்பட்டாலும், சபாநாயகர் சபை அமர்வுகள் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே அரசாங்கம் கொரோனா அபாயத்துக்கு மத்தியில் சபையைக் கூட்டியதாகவும் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
‘சஜித் பிரேமதாஸவுக்கு பாராளுமன்றத்துக்கு வெளியே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில், சபாநாயகர் விளக்கமளிக்க வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.