February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின் விநியோக தடையால் 177,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் சுமார் ஒரு இலட்சத்து 77 ஆயிரம் பாவனையாளர்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மின் தடை ஏற்பட்டதால் கொழும்பு, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, குருணாகல், நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதில் நேற்றைய தினம் (26) மாத்திரம் 76 ஆயிரம் வீடுகள் மின் தடையால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தடைப்பட்ட மின் விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் வேகமான காற்று காரணமாக பல பாகங்களில் மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதனால் இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்தந்த பகுதிகளை சேர்ந்த மின்சார சபை ஊழியர்களால் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளுக்கமைய கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.