பருப்பு, டின் மீன்,பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளது.
வரி நீக்கத்திற்கு அமைவாக நேற்று நள்ளிரவு முதல் டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் பாவனையாளர்களினால் கொள்வனவு செய்ய முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தங்களால் புதிய விலைகளுக்கு அந்த பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலைமையே காணப்படுவதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரிகளுடன் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதால் உடனடியாக புதிய விலைக்கு தங்களால் அதனை விநியோகிக்க முடியாது என்று அத்தியவசிய பொருள் இறக்குமதியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் வர்த்தக நிலையங்களுக்கு சென்று ஆராய்ந்து வருகின்றனர்.
அதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தங்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக விலைக்கு விற்போர் தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.