November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலுக்கு கட்டார், இந்தியா அனுமதி மறுத்த நிலையிலேயே இலங்கைக்கு வந்துள்ளது’

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலுக்கு கட்டார் மற்றும் இந்திய துறைமுகங்கள் அனுமதி மறுத்த நிலையிலேயே இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேற்படி இரண்டு நாட்டு துறைமுகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே, கப்பல் இலங்கைக்கு வந்ததாக கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கப்பலின் தீ விபத்துக்கு, கொள்கலன்களில் இருந்த இரசாயனப் பொருட்களின் கசிவு காரணமாக அமைந்துள்ளது.

கப்பலில் இருந்த இரசாயனப் பொருட்கள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படாத காரணத்தினால், தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் எக்ஸ்- பிரஸ் பேர்ல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னோல் குறிப்பிட்டுள்ளார்.

கப்பலின் கொள்கலன்களில் உள்ள இரசாயனப் பொருட்களின் கசிவை இலங்கைக்கு 1000 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அரேபிய கடலிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இவ்விடயத்தை அறிந்துகொண்ட கப்பலின் தளபதி, இந்தியாவின் ஹசீரா மற்றும் கட்டாரின் ஹம்மாட் துறைமுகங்களுக்கு வர அனுமதி கோரியுள்ளார்.

அத்துறைமுகங்களின் ஒன்றில் கொள்கலன்களை இறக்குவதற்கு கப்பல் தளபதி எதிர்பார்த்துள்ளார்.

இதன் காரணமாகவே, அருகில் உள்ள இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வரத் தீர்மானித்துள்ளார்” என்றும் கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா அல்லது கட்டார் துறைமுகங்கள் இந்த பொருட்களை இறக்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தால், இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டு இருக்காது என்றும் டிம் ஹார்ட்னோல் குறிப்பிட்டுள்ளார்.