கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த இரசாயன கொள்கலன்கள் மற்றும் கப்பலின் எரிப்பொருள் கடலில் கலந்தமையினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்புத் துறைமுகத்தினை அண்டிய கடல் பகுதியில் கடல் சார்ந்த ஆய்வு நிறுவமான ‘நாரா’ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
கடலில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் மற்றும் திரவங்களின் மாதிரிகள் சேகரித்து வரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில் கடலில் கலந்துள்ள இரசாயனப் பதார்த்தங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனை முடியும் வரை கொழும்பை அண்டிய பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இரசாயனக் கொள்கலன்களை ஏற்றி வந்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது.
தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு துறைமுகம் அருகில் தீ விபத்துக்குள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள் மற்றும் சிதைவுகள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
கரையொதுங்கியுள்ள கொள்கலன்களில் அபாயகரமாக பொருட்கள் காணப்படக்கூடும் என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் கடலோரப் பகுதிக்கு மிதந்துவரும் எந்தவொரு பொருளையும் பிடிப்பதைத் தவிர்க்குமாறு அப்பகுதி மக்களுக்கு மற்றும் மீன்பிடி சமூகத்திக்கு கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.