மேற்கத்தேய மருந்துகளை கொண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. உடலில் ஏற்றப்படும் கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பூசிகளின் பின்விளைவுகள் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும்.தடுப்பூசிகளை மாத்திரம் நம்பி மக்களை கொல்லவேண்டாம் என பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சீனா,வியட்நாம், கம்போடியா, கியூபா போன்ற நாடுகளின் ஆயர்வேத மருத்துவத்தை முன்னுதாரணமாக கொண்டு இலங்கையும் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கொவிட் -19 வைரஸ் பரவலை மேற்கத்தேய மருத்துவத்தால் கட்டுப்படுத்தியதாகவோ,அல்லது கொவிட் சவால்களை வெற்றி கண்டதாகவோ எந்தவொரு நாடும் இன்னமும் அறிவிக்கவில்லை.
உண்மையை கூறுவதென்றால் தடுப்பூசிகளை பயன்படுத்துவதால் கொரோனா வைரஸ் கட்டுப்படாது. எனவே இலங்கையில் வெறுமனே தடுப்பூசிகளை எதிர்பார்த்து இருக்காது ஆயுர்வேத, பாரம்பரிய ஒளடதங்களை பயன்படுத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
மூன்று ஆயுர்வேத மருத்துவமனைகளை அரசாங்கம் அபகரித்துக்கொண்டு கொவிட் -19 நோயாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றியுள்ளனர்.விசேட வைத்திய நிபுணர் ஹரிஷ் பதிறகே தெரிவித்தார்.
ஆகவே ஆயுர்வேத மருத்துவம் இன்று ஓரங்கட்டப்பட்டு வருகின்றது. இதன் விளைவுகள் மோசமானதாக அமையும். தேசிய ஒளடத கூட்டுத்தாபனத்திற்கும், சுகாதார அமைச்சிற்கும் நாம் இது குறித்து அறிவித்தும் அவர்களால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளது.ஏனெனில் அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கும் ஒரு சிலர் ஆயுர்வேத மருத்துவத்தை அழிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தினர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தும் மேற்கத்தேய மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் உடலில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிந்து அழிக்க உதவுகின்றது. ஆனால் கொரோனா வைரஸ் என்ற ஒன்றினை மாத்திரம் கருத்தில் கொண்டு ஆயுர்வேத மருத்துவம் செயற்படுவதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு நபரின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதாகும். இப்போதுள்ள சூழலில் ஒரு நபரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயற்பாடுகளே அவசியமாகும் என ஆயுர்வேத சிறப்பு வைத்தியர் பி.எ.ரத்னபால தெரிவித்துள்ளார்.