நாட்டில் 70 வீதமானோருக்கேனும் தடுப்பூசியை ஏற்றினால் மாத்திரமே கொவிட் பரவலில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறார் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன.
கொவிட் -19 வைரஸ் பரவல் நெருக்கடிகளை இந்த ஆண்டு இறுதி வரையில் நாடு எதிர்கொள்ள நேரிடும் எனவும், நாட்டில் 70 வீதமானவர்களுக்கேனும் தடுப்பூசியை ஏற்றிய பின்னரே வழமையான செயற்பாடுகள் குறித்து சிந்திக்க முடியும் எனவும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
அடுத்த கட்டத்தில் மரணங்கள் அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால் வயதானவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் தற்போதுள்ள நிலைமை ஆரோக்கியமானதாக கருத முடியாது.தொடர்ச்சியாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் நிலைமையே காணப்படுகின்றது. எனவே தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி கொண்டுளோம். குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு 32 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைகளை செய்துள்ளோம்.இதில் 13 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும், 5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளும், 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் நிச்சயமாக கிடைக்கும்.
அதற்கும் அப்பால் ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் உலக நாடுகள் அனைத்துமே பாரிய நெருக்கடியில் உள்ள நிலையில், அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளையும், உலக சுகாதார ஸ்தாபனம் வழங்குவதாக கூறிய தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு இறுதி வரையிலும் கொவிட் -19 வைரஸ் தொற்றுடன் போராட நேரிடும்.70 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றிய பின்னரே எம்மால் அடுத்தகட்ட வழமையான செயற்பாடுகள் குறித்தும் சிந்திக்க முடியும். தற்போதுள்ள நிலையில் ஆண்டு இறுதி வரைக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறினார்.