January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வேகமான இணைய சேவையை பெற்றுத்தருமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

நாட்டில் இணைய சேவைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தொடர்பில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் கல்வி நடவடிக்கைகளும் அலுவலக நடவடிக்கைகளும் இணையத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நாட்டில் அதிகரித்துள்ள இணைய பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லாததன் காரணமாக இணையத்தின் ஊடாக கல்வி கற்கும் மாணவர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் இன்றியமையாதது என தெரிவித்துள்ள குறித்த சங்கம், அதனை சரியான தரத்தில் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு தேவையான விரைவான இணைய வசதிகளை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.