யாழ். மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 46 குடும்பங்களை சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடுங்காற்றின் தாக்கத்தின் காரணமாக இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சிறு தொழில் முயற்சியாளர்கள் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த பாதிப்புகள் தொடர்பில் அனைத்து விவரங்களும் புதிய பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, கடும் காற்று காரணமாக காயம் அடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முகமாலை பகுதியில் வீட்டின் கூரைத்தகடு உடைந்து தலையில் வீழ்ந்ததில் படுகாயம் அடைந்த முதியவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு மன்னார் மாவட்டத்திலும் கடும் காற்றுடனான காலநிலையால் நேற்று செவ்வாய்க்கிழமை, 16 குடும்பங்களை சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் தெரிவித்தார்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் 13 வீடுகளும், 2 சிறிய கடைகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசி செய்கையும், தேவன் பிட்டி,வெள்ளாங்குளம் பகுதியில் 5 ஏக்கர் வாழைத்தோட்டமும் குறித்த காற்றினால் முழுமையாக சேதமடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் சென்றுள்ளதோடு, கடற்கரையில் கட்டி வைக்கப்பட்ட படகுகளும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மீனவர்களின் மீன் வாடிகளும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கனகரட்ணம் திலீபன் தெரிவித்தார்.