July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டு சிறை கைதிகள் உட்பட கொரோனா நோயாளர்கள் மூவர் தப்பியோட்டம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மூன்று கொரோனா நோயாளர்கள் தப்பிச்சென்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதன்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்று (25) பூஸா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கைதியொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதுடன், இவர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கைதியை அழைத்துச் செல்லும் போது மாத்தறை வீதியில் மின் கம்பமொன்று வீழ்ந்துள்ளதுடன், அதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்போதே கைதி சிறைச்சாலை பஸ் ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற கைதியை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பொலிஸாரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று (25)மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நோயாளி அம்பாறையை சேர்ந்த மொஹமட் ரிகாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் அதனை வழங்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையிர் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில், இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் தமக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து அவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று (26) காலை குறித்த சிறைக் கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸாரும், பாதுகாப்புத் தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.