கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றியுள்ள ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலிலிருந்து கரையொதுங்கும் பொருட்களை எடுத்துச் செல்லும் நபர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தீ பற்றியுள்ள ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து விழும் பல்வேறு கொள்கலன்கள் மற்றும் பிற பாகங்கள் திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையான கடற்கரைப்பகுதிக்கு மிதந்து வரும் நிலையில் அவற்றை பிடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
கப்பலின் கொள்கலன்களில் தோல் நோய் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய நச்சு, இரசாயனப் பொருட்கள் இருப்பதாகவும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு கரையொதுங்கும் கொள்கலன்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து ‘1981’ எண்ணுக்கு அறிவிக்கும்படியும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வத்தளை – ப்ரீத்திபுரவிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் கரையொதுங்கிய பொருட்களை அப்பகுதிகளை சேர்ந்த பலர் எடுத்து சென்றுள்ளனர்.
இதேவேளை, திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையான கடற்கரைப்பகுதியிலும் மற்றும் பாணந்துறை முதல் வத்தளை கடற்கரைப்பகுதியிலும் படையினால் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கடலோர காவல்படையின் உதவியுடன் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடலில் மிதக்கும் பொருளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.