இலங்கை அரசாங்கம் இணையவழி கற்பித்தலுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதியினை ஒதுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தாம் கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் போது கல்விக்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக செலவிடப்படாமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரிய சேவை சங்கம் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தாலும், கல்வி அமைச்சு அவற்றைக் கருத்திற்கொள்ளவில்லை என்று சுந்தரலிங்கம் பிரதீப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு வருட காலத்திற்கு மேலாக வீழ்ச்சி கண்டுள்ள மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு இணையவழி கற்றல் செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளதாகவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.