இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவோ அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தோ தற்போது எந்தவித அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கவினால் தமது நாட்டு பிரஜைகளுக்கு இலங்கைக்கான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விளக்கமளித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையினரால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரமே இலங்கைக்கு 4 ஆம் நிலை பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொவிட் 19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள பயண ஆலோசனையில் வழமைப் போன்றே பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத எச்சரிக்கை குறித்து முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அமெரிக்கத் தூதரகரம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளுக்கமைய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் கிடையாது என்று தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.