
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த கொள்கலன்களும், கப்பலின் சில பாகங்களும் நீர்கொழும்பு பகுதியில் கரையொதுங்கி வருவதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுடன் வந்த குறித்த கப்பல், கடந்த 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் வட மேற்கு பகுதியில் 9.5 கடல்மைல் தொலைவில் தீ விபத்துக்கு உள்ளானததுடன் நேற்றைய தினத்தில் அதில் வெடிப்பு ஏற்பட்டது.
இதன்போது 8 கொள்கலன் பெட்டிகள் கடலில் விழுந்த நிலையில், அது தொடர்பாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த கொள்கலன்களுக்குள் இரசாயனப் பொருட்கள் இருப்பதால் கடலிலோ, கரையிலோ அவற்றை கண்டால் அருகில் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் கொள்கலன்கள் சிலவும், கப்பலின் பாகங்கள் என்று நம்பப்படும் பொருட்களும் கரையொதுங்கியள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்ச விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கப்பலில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.