
இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை விரிவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம்,கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்ற குருநாகல் , மாத்தறை மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு முதலில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பத்திரன இந்த தகவலை வெளியிட்டார்.
“ஜூன் மாதத்தில் அதிகமான தடுப்பூசிகளை பெற்று குருநாகல், மாத்தறை மற்றும் காலிக்கு ஒதுக்குவோம் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய தடுப்பூசி இயக்கம் இப்போது மக்கள் தொகை அதிகமாக கொண்ட மேற்கு மாகாணத்தில் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், மேற்கு மாகாணத்திற்கு வெளியே முதல் தடுப்பூசி இயக்கம் இந்த வாரம் கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் 14 மில்லியன் டோஸையும், ஒக்ஸ்போர்டின்-அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸை வாங்குவதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.