November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போலியான வைத்தியர் முத்திரைகளுடன் வாகனம் செலுத்திய மூவர் கொழும்பில் கைது!

நாட்டில், வைத்தியர் என்று போலியாக முத்திரை பதித்துக்கொண்டு பயணித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நாட்டில் இன்று பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து ஏனையோருக்கு வாகனங்களில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியர் என போலியான முத்திரை பதிக்கப்பட்ட கார்களில் பயணித்த வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் நாராயன்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கருவாதோட்டம் பகுதியில் இவ்வாறு காரில் பயணித்த 46 வயதான நபர் ஒருவரும் அதே குற்றத்தில் புறக்கோட்டை பகுதியில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணக்கட்டுப்பாடுகளின் போது தொழில் வல்லுநர்களாகவோ அல்லது அத்தியாவசிய சேவையின் கீழ் கடமையாற்றும் ஊழியர்களாகவோ ஆள்மாறாட்டம் செய்து வாகனம் செலுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் ஆள்மாறாட்ட மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடுகளின் போது வைத்திய முத்திரைகளுடன் பயணிக்கும் வாகனங்களையும் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.