November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம சேவகர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

Covid Related Images

File Photo

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் முறைக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் மொத்தம் 12,000 கிராம சேவகர்கள்  இன்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கோடிக்கார தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பத்தில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதும், தற்போது முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை எனவும் இதனை நாங்கள் முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றின் 1வது மற்றும் 2வது அலையின் போது கிராம  சேவகர்கள் இரவு பகலாக பணியாற்றினர். எம்மில் ஒருவர் இறந்துள்ளார். மேலும் பலர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, கிராம சேவகர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொண்ட போதும்  இதுவரை அரசாங்கத்தால் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை,  எனவும் சங்கத்தின் தலைவர் சுமித் கோடிக்கார கூறினார்.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் முறைக்கேடாக நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தடுப்பூசி திட்டம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.