கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபானசாலை ஒன்று, மதுவரித் திணைக்களத்தினால் சீல் வைக்கப்பட்டதுடன், மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மதுபான சாலைகளை மூட மதுவரி ஆணையாளர் கட்டளையிட்டுள்ள நிலையில், அதனை மீறி மதுபான சாலையைத் திறந்த குற்றச்சாட்டில் அதன் முகாமையாளர், விற்பனையாளரும் அரச சாராயத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மதுபான சாலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற புலனாய்வுப் பிரிவு மற்றும் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மூவரைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன், மதுவரி ஆணையாளரின் உத்தரவை மீறியதாக மதுபான சாலைக்கு சீல் வைக்குமாறு மதுவரித் திணைக்களத்துக்கு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மதுபான சாலை சீல் வைக்கப்பட்டதுடன், சட்டத்தை மீறி மதுபான சாலையில் விற்பனைக்கு வைத்திருந்த 750 மில்லி லீற்றர் அளவுடைய 4 மதுபான போத்தல்களும் 185 மில்லி லீற்றர் அளவுடைய 100 போத்தல்களும் மற்றும் 8 பியர் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை சந்தேக நபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.