October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 745 பேர் ஒரே நாளில் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்,  கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறை அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முக கவசங்களை அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 13 ஆயிரத்து 493  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், சுகாதாரத் தரப்பினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறும்,பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை  மீறி செயற்படுபவர்களை ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைக்கமைய நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம், மேல் மாகாணம் மற்றும் கொழும்பு  நகருக்கு உட்பட்ட பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணித்த 60 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்த 106  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.