July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு மாதாந்தம் 2500 ரஷ்ய சுற்றுலா பயணிகளை அழைத்துவர முடியும் என்கிறார் உதயங்க வீரதுங்க!

நாடு கொரோனா தொற்றிலிருந்து மீண்டதன் பின்பு, சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மாதாந்தம் நாட்டுக்கு 2500 ரஷ்ய சுற்றுலா பயணிகளை அழைத்துவர எதிர்பார்த்துள்ளதாக இலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்க கடந்த டிசம்பர் முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார். எனினும் இது குறித்து தாம் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக அவர் அண்மையில் தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அவர் டெய்லி மிரர் பத்திரிகையுடனான உரையாடல் ஒன்றிலேயே இதனை கூறியுள்ளார்.

மொஸ்கோவிற்கும் கொழும்பிற்கும் இடையே வாரத்திற்கு குறைந்தது ஒரு விமானத்தையாவது சேவையில் ஈடுபடுத்துவது குறித்து விவாதங்கள் நடந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது அண்டைய தீவான மாலைதீவு மாதத்திற்கு 20,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடிந்தால், இலங்கை குறைந்தது 2,500 ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் வீரதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கு இடையே விமான சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், இலங்கையின் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக அவை நிறுத்தப்பட்டன.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டம் இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின் , சுகாதார அதிகாரிகள் அனுமதியுடன் மீண்டும் தொடங்கப்படும் என்று வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பயணக்கட்டுப்பாட்டு வளைய முறையின் ஊடாக அழைத்துவரப்பட உள்ளதுடன், பாசிக்குடா உள்ளிட்ட நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் அவர்களை அனுமதிக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஏனைய நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கினால் உக்ரேயின் மற்றும் ரஷ்யாவின் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.

உக்ரேயின் மற்றும் ரஷ்யாவின் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுமானால் அது பாரபட்சமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே நாடு சுற்றுலா பயணிகளுக்காக நாடுகளின் எல்லைகளை திறக்கும் போது உக்ரேயின் மற்றும் ரஷ்யா சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நாடுகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.