July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் வெடிப்புக்குள்ளான கப்பலின் நச்சு கொள்கலன்கள் கடலில் கலப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பரவல் ஏற்பட்டிருந்த கப்பலில் இருந்த ஆபத்தான இரசாயன கொள்கலன்கள் கடலில் கலந்துள்ளதாக பல-நாள் மீன்பிடி மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘எம்.வி- எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் கடந்த சில தினங்களாக தீப்பரவல் ஏற்பட்டிருந்ததோடு, இன்று காலை வெடிப்பு சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது.

குறித்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த நச்சுத் தன்மையுள்ள இராசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கப்பலில் இருந்த இரசாயனப் பொருட்கள் சுவாச பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தக்கூடிய நச்சுத் தன்மை வாய்ந்தவை என்றும் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடலில் மிதக்கும் கொள்கலன்களை மீனவர்கள் அல்லது கரையோர மக்கள் அவதானித்தல், அங்கிருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.