பெலவத்த – தலங்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த மே 8ஆம் திகதி பணம் மற்றும் நகை உட்பட்ட 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட 2 சந்தேக நபர்களில் ஒருவர் பெலிஹுலோயாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்டு சென்றதாக தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேநேரம், சந்தேக நபர்கள் வீட்டிலிருந்து ஒரு பாதுகாப்பான லொக்கரையும் எடுத்துச் சென்றதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, பெலிஹுலோயாவில் வசிக்கும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 21 மில்லியன் மதிப்புள்ள பணம் மற்றும் திருடப்பட்ட மேலும் சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட 34 வயதான சந்தேக நபர் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரையும் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கொள்ளை மற்றும் வீடுகளை உடைக்கும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.