May 24, 2025 17:30:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

15 மில்லியன் டோஸ் கொவிட் தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 15 மில்லியன் டோஸ் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) கூடிய, வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்த சனத்தொகையில் 60 முதல் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 14 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளையும் ஒரு மில்லியன் டோஸ் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் டோஸ் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை)  மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே சீனா 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஏப்ரல் மாதம் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.