இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயல்முறை மீறப்பட்டதாகக் கூறி பொது சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
சுகாதார அமைச்சால் வழமையாகப் பின்பற்றப்படும் பொதுவான தடுப்பூசி வழங்கும் செயன்முறை மீறப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் எஞ்சியிருந்த அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை, சுகாதார அமைச்சின் பொதுவான செயன்முறையை மீறும் செயலாகும் என்று சுகாதார பரிசோதகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாட்டில் எஞ்சியிருந்த தடுப்பூசிகளை அத்தியாவசிய தேவையுடையோருக்கும் முன்கள சுகாதார பணியாளர்களுக்கும் வழங்காமல், மருத்துவர்களின் உற்றார், உறவினர்களுக்கு வழங்கியது தவறானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் நடைமுறை மீறலைக் கண்டிக்கும் விதமாக பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள சுகயீன விடுமுறை எடுத்துள்ளனர்.