July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் -19 வைரஸினால் கருப்பு பூஞ்சை நோய் உருவாகாது; கருப்பு பூஞ்சை விசேட வைத்தியர் கூறுகிறார்

கொவிட் -19 வைரஸ் காரணமாக ‘கருப்பு பூஞ்சை’ நோய் உருவாவதில்லை.அதேபோல் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட எவருக்கும் இதுவரை கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்தியர் ப்ரீமாலி ஜெயசேகர தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது அதிக அச்சுறுத்தல் என பேசப்படும் கருப்பு பூஞ்சை நோயானது இலங்கைக்கு புதிய நோய் அல்ல.இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பு பூஞ்சை நோய் பரவலில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டில் 42 பேரும், 2020 ஆம் ஆண்டில் 24 பேரும் இந்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டில் இதுவரை 24 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் எவருக்கும் கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

சாதாரண முகக்கவசத்தை நான்கு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் பயன்படுத்த வேண்டாம், அதேபோல் என் 95 முகக்கவசத்தை நீண்ட காலமாக பயன்படுத்தவோ அல்லது கழுவிக்கழுவி மீண்டும் பயன்படுத்தவோ வேண்டாம்.

ஒரே முக கவசத்தை அழுக்காக்கி, ஈரமாக்கி பயன்படுத்தவும் வேண்டாம்.அதேபோல் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் மண்ணில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கருப்பு பூஞ்சையை உருவாக்கும் வைரஸ் மண்ணில் இருந்தே உடலுக்குள் செல்கின்றது. பெரும்பாலும் உடல் மலவீனமான, நோயெதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கே கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்படுகின்றது.

அதேபோல் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் இலங்கையில் தாராளமாக உள்ளன. எனவே மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.