November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது வாகன போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்’: ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது வாகன போக்குவரத்து தடை செய்யப்படுவது எந்த சட்டத்தின் கீழ் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா பரவல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, அரசாங்கம் நாட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினோக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

“மக்கள் மருத்துவமனைகளுக்கும், பொருட்களை வாங்கவும் வங்கிகளுக்கு செல்லவும் அனுமதிக்கப்படும் போது, வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

இது மழையுடன் கூடிய காலமாகும். மக்கள் வீதியில் நடந்து செல்வார்கள் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை.

வியாபாரிகள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வங்கிகளுக்கு செல்லவும் எதிர்பார்த்து இருக்கக்கூடும். இந்நிலையில், வாகன பயணங்களைத் தடை செய்வது பொருத்தமில்லை”

என்றும் தினோக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.