July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பதில் பயனில்லை;ஜனாதிபதி வலியுறுத்தல்!

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் நாட்டை தொற்று நோயிலிருந்து மீட்பதற்கு நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (24) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே 25 ஆம் திகதி பயணத்தடைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதே அன்றி, களியாட்டங்களுக்காக அல்ல எனவும் அவர் வலியுறுத்தினார்.

நான் இன்று செயலகத்திற்கு வரும் போது வீதியில் அதிகமான வாகனங்களை அவதானித்தேன்” என அவர் கூறினார்.

நாட்டில் இன்று பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் எவ்வாறு இத்தனை வாகனங்கள் பயணிக்க முடியும். வைத்தியர்களின் வாகனங்களாக இவை இருக்க முடியாது. இவ்வாறானவர்களை நிறுத்தி விசாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வைத்தியர் என்று போலியாக முத்திரைகளை பதித்துக்கொண்டு வாகனங்களில் பயணிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன் போது குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் உணர்ந்து செயற்பட தவறினால் பயணத் தடைகளை அமுல்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவது குறித்து கிராம சேவகர்களுடன் இணைந்து திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் இதன் போது மேலும் கூறியுள்ளார்.