File Photo
ஒக்ஸிஜன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் தீவிர சிகிச்சை பிரிவின் சுகாதார உதவியாளர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாட்டில் பணிபுரியும் ஒரு சுகாதார ஊழியரின் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாட் இலக்கம் 43 இல் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒக்ஸிஜன் சிலிண்டர்கள் இரண்டு காணாமல் போயுள்ளதாக குறித்த வாட்டுக்கு பொறுப்பான அதிகாரிகளால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் போது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து இரண்டு சிலிண்டர்களுடன் திருட்டில் ஈடுபட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சுகாதார ஊழியரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
இதனிடையே வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் மேலும் ஒரு ஒக்ஸிஜன் சிலிண்டர் திருடப்பட்டுள்ளதாக அந்த பிரிவில் பணி புரியும் தாதி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.