பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளால் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய தொழில்நுட்ப அமைச்சால் இதற்கான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘போர்ட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பு உரிய முறையில் கணக்கிடப்படவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை அடுத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு உரிய முறையில் கணக்கிடப்படவில்லை என ஆளுங்கட்சி சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சபாநாயகரிடம் முறைப்பாட்டினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 147 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
எனினும், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த ஹேரத்தின் வாக்குகள் கணக்கிடப்படவில்லை என ஆளும் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.