October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு 7, மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊழியர்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதன் பின் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய பொதுமக்களுக்கு திறக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாராளுமன்ற சி.சி.டிவி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதற்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தொடர்பை பேணிய 10 முதல் 15 வரையான எம்.பி.க்களும் பாராளுமன்ற ஊழியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாஸ நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.