இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்போது நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக களனி கங்கை ,நில்வலவை கங்கை, தெதுரு ஒய ,ஜின் கங்கை, ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏற்படக் கூடிய அனர்த்த நிலைமையின் போது உடனடியாக செயற்படக் கூடிய வகையில் கடற்படை மற்றும் விமானப் படையின் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் மீட்புப் படகுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் இருப்பதுடன், உடனடியாக செயற்படக் கூடிய வகையில் இரத்மலானை, பலாலி, அனுராதபுரம் உள்ளிட்ட விமானப் படைத் தளங்களில் 9 ஹெலிக்கப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.