
இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் போன்றே, பொதுமக்களின் ஏனைய சுகாதார தேவைகள் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் தேசிய வைத்தியசாலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த மக்கள் தொகையின் 10 சதவீதத்தினருக்கு சேவைகளை வழங்க முடியுமான விதத்தில் குருநாகல் வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல், புத்தளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நேரடியாக பயனடையும் வகையில் குருநாகல் வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்தில் வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை வளாகத்தினுள்ளேயே பேருந்து நிலையம், கவர்ச்சிகரமான பசுமை கருத்தாக்கத்தின் கீழ் வைத்தியசாலை சூழல், போதனா வைத்தியசாலை மற்றும் சத்திரசிகிச்சை, சிறுவர் மற்றும் மகப்பேறு ஆகிய துறைகளில் உயர்மட்ட சேவைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண பிரதேச வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 2021 ஆண்டில் 602 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.