கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் நாட்டில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளால் நோயாளிகளின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அரசாங்க மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர், அங்குள்ள கொரோனா நோயாளிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை புகைப்படம் எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில வெளியிட்டதை அடுத்து அந்த புகைப்படம் வைரலாக பரவியது.
குறித்த பத்திரிகையாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு படுக்கைகளின் பற்றாக்குறை இருந்ததால் பத்திரிகையாளர் தரையில் உட்கார வேண்டியிருந்தது. அத்துடன் பெரும்பாலான படுக்கைகளுக்கு இடையில் அல்லது தரையில் பாய்கள் மற்றும் மெத்தைகளில் நோயாளிகள் தூங்குவதை அவதானிக்க முடிந்தது.
இந்த விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் விவாதிக்கப்பட்டபோது, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதாக கூறியிருந்ததுடன், அந்த நோயாளிகளுக்கு சில படுக்கைகளை ஏற்பாடு செய்ய முடியும் என்பதில் தான் உறுதியாக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த பத்திரிகையாளர் மதுகமவில் உள்ள ஒரு சிறந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிகளவான நோயாளிகள் நேற்று காலை வரை படுக்கைகள் இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பாணந்துறை மருத்துவமனையின் பணிப்பாளர் இந்திரானி கொடகன்த கருத்து தெரிவிக்கையில்,
மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், கொரோனா நோயாளிகளுக்கு புதிய படுக்கைகளைப் பெறுவது குறித்து நிர்வாகத்திற்கு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எது எவ்வாறாயினும், இந்த சம்பவத்தையடுத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, கொரோனா நோயாளிகளை கையாளும் மருத்துவமனைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நிதி குறித்து சுகாதார அமைச்சருக்கும், திறைசேரிக்கும் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.