January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒரே நாளில் 600 இற்கும் அதிகமானோர் கைது!

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்,  நேற்று காலை முதல் இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் இலங்கை முழுவதும் 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவானவர்கள் கைதான முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  மாத்தளை மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மாவட்டத்தில் மாத்திரம் 206 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த 2020 ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 12 ,700 இற்கும் அதிகமானோர், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் நபர்களை அடையாளம் காண்பதற்காக நேற்று கொழும்பு மாவட்டத்தின் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம் மற்றும் கிராண்ட்பாஸ் உள்ளிட்ட பகுதிளில் ‘ட்ரோன்’ கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

இதன்போது சட்டத்தை மீறி வெளியில் நடமாடிய 27 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘ட்ரோன்’ கெமரா நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.