கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளிடம் இருந்து பெற்று கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை அடுத்து தற்போது இலங்கையில் “சினோவெக்ஸ்” எனும் தடுப்பூசியை உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும், சீன நிறுவனங்களுடன் இணைந்தே இந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனம் மற்றும் கெலோன்லைப் சயன்சஸ் நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து “சினோவெக்ஸ்” தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்ட அவர், கடந்த வாரம் இதற்கான அனுமதிப்பத்திரத்தை நானே அமைச்சரவையில் முன்வைத்து அனுமதியை பெற்று கொண்டேன் என்றார்.
இது சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசி அல்ல.இது இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியாகும்.ஆயினும் இதே தடுப்பூசிகள் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.அதன் மாதிரிகளை பெற்றுக்கொண்டே இலங்கையில் உற்பத்தி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.