July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு?; பாராளுமன்ற படைக்கல சேவிதர் ஆராய்வு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அவரின் மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சஜித் பிரேமதாஸவுடன் பாராளுமன்றத்தில் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து கண்டறிவதற்காக பாராளுமன்ற சி.சி.டிவி பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரித்தார்.

அத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தொடர்பில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் சுகாதார விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ நடமாடிய இடங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு அருகே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது அவருக்கு தொற்று ஏற்பட்டதா?என்ற சந்தேகம் இருப்பதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்பிலிருந்த மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கொவிட் வைரஸ் தொற்று காரணமாக மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.